சதை உங்களுக்கு, கொட்டை எங்களுக்கா..? உதயநிதியால் கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 12, 2021, 3:18 PM IST
Highlights

திமுக 234 தொகுதிகளில் போட்டியிட்டால் அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெறும். எனவே திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது.

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்களே! அதுபோல இருக்கிறது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் அத்துமீறிய பேச்சுக்களும், அநாகரீக செயல்பாடுகளும் என்கிறார்கள்.

இது குறித்து திமுக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர், ‘’தனக்குத் தானே திரைப்படம் எடுத்துக்கொண்டு ஜாலியாக வலம் வந்துகொண்டிருந்த உதயநிதி ஒரே இரவில் திமுகவின் ஸ்டார் அட்ராக்‌ஷன் பதவியில் அமர்த்தப்பட்டார். அரசியல் முன் அனுபவம் துளியும் இல்லாத இவருக்கு இளைஞரணி செயலாளர் என்கிற உயர்ந்த பொறுப்பு கொடுக்கப்பட்டதில் சீனியர் நிர்வாகிகளுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. ஆனாலும் ராஜா வீட்டு கன்றுக்குட்டியாய் வலம் வருகிறார். அதனால் வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டோம்.

 

கட்சி நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பது, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தனக்கு வேண்டிய ஆட்களை நியமிப்பது என அதிகாரம் செய்யும் உதயநிதியின் மேடைப் பேச்சு மூன்றாம் தரமாக இருப்பதாக திமுகவை சேர்ந்த நாங்களே வருத்தப்படுகிறோம். சுற்றியிருக்கும் துதிபாடிகள் சிரிப்பதை உண்மை என்று நம்பி அவர் பேசும் பேச்சுக்கள் அபத்தமாகவே இருக்கின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் சசிகலா பற்றி அண்மையில் உதயநிதி வெளியிட்ட ஆபாச கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவிக்க, கடைசியில் வேறு வழியில்லாமல் வருத்தம் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வழக்கு தொடரப்போவதாக நோட்டீசும் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள் அடுத்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் உதயநிதி. ‘வரும் தேர்தலில் திமுக 234 தொகுதிகளில் போட்டியிட்டால் அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெறும். எனவே திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது. இது பற்றி தலைவரிடம் நான் கூறியிருக்கிறேன்’என அவர் நீட்டி முழங்கியிருப்பது எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

வெண்ணை திரளும் நேரத்தில் தாளியை உடைத்த மாதிரி இருக்கிறது திமுகவினரின் செயல்பாடுகள். அதிலும் குறிப்பாக உதயநிதியின் பேச்சுக்கள் கூட்டணி கட்சியினரை ரொம்பவே கொதிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன. 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்றால் எதற்காக கூட்டணி ? கூட்டணி தேவையில்லை என அறிவிக்கும் தைரியம் திமுகவிற்கு இருக்கிறதா?

அதேமாதிரி வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை திமுகவிற்கு தர வேண்டும் என்பது அப்பட்டமான அதிகார தோரணை. அப்படியானால் கூட்டணி கட்சிகளுக்கு தேறாத தொகுதிகள்தான் ஒதுக்கப்படுமா? சதை அவர்களுக்கு, கொட்டை எங்களுக்கு என்பது என்ன மாதிரியான நியாயம்? அரசியல் முதிர்ச்சியில்லாத இதுபோன்ற பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நல்லுறவை பாழ்படுத்திவிடும். எனவே மகன் என்று பாராமல் உதயநிதிக்கு ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்’’என கொந்தளிக்கின்றனர். 

click me!