DMK alliance : நான்கே வார்டுகள்தான்.! காங்கிரஸைத் திணறடித்த திமுக.. திருச்சி மாநகராட்சியில் கூட்டணி டமால்.?

By Asianet TamilFirst Published Jan 29, 2022, 10:21 PM IST
Highlights

குறைந்தபட்சம் 10 வார்டுகளை ஒதுக்கினால் மட்டுமே ஏற்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குக் குறைவாக ஒதுக்கினால், தனித்து போட்டியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

திருச்சி மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் மட்டுமே திமுக ஒதுக்க முன்வந்துள்ளதால், கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டில் தமாகா, 2006-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் மேயர் பதவியை ஒதுக்கி தாராளம் காட்டியது திமுக. அதேபோல அப்போது கணிசமான வார்டுகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. ஆனால், அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. திருச்சி மாநகராட்சியில் இரு முறை திமுக மெஜாரிட்டியாக வெற்றி பெற்றபோதும், மேயர் பதவியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்ததால், அக்கட்சியினர் மேயர் பதவியை எட்டி பிடிக்க முடியவில்லை. இந்த முறை எப்படியும் திமுகவைச் சேர்ந்தவர் மேயராக வர வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

ஏற்கனவே திமுக சார்பில் அமைச்சர் கே.என். நேரு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 15 வார்டுகளைக் கூட்டணி கட்சிகளுக்கும் 50 வார்டுகளில் திமுகவும் போட்டியிடும் என்று பேசியிருந்தார். இந்நிலையில் திருச்சியில் கூட்டணி கட்சிகளிடம் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என். நேரு, அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் எடுத்த எடுப்பிலேயே 3 வார்டுகள் என்று கூறி திமுக  குழு அதிரடித்தது. இதை ஏற்காத காங்கிரஸ் கட்சி, கூடுதல் வார்டுகள் தேவை என்று வலியுறுத்தியது. இதனையடுத்து 4 வார்டுகள் தருவதாக திமுக தெரிவித்தது.

நான்கு வார்டுகளை ஏற்க முடியாது என்று மறுத்த காங்கிரஸ் குழு, ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாகக் கிளம்பிவிட்டது. பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸார் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், குறைந்தபட்சம் 10 வார்டுகளை ஒதுக்கினால் மட்டுமே ஏற்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குக் குறைவாக ஒதுக்கினால், தனித்து போட்டியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால், திருச்சி மாநகராட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்டுள்ளது.   

click me!