Annamalai on DMK : தமிழக ஆளுநர் மீது அவதூறு.. ஒவ்வொருவரும் திமுகவை கண்டிக்க வேண்டும்.. அண்ணாமலை ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Jan 29, 2022, 9:21 PM IST
Highlights

தமிழக ஆளுநர் அரசின் செயல்பாடுகளை இதற்குமுன் பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார். அப்போது எல்லாம் முரசொலி இந்த ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக கட்சி பத்திரிகையான முரசொலியில் விமர்சித்திருந்த நிலையில், தமிழக பாஜக  தலைவர் பதில் அளித்துள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சித்து திமுக கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் ‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் இன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரை அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, முரசொலி பத்திரிகையில் தமிழக ஆளுநர் குறித்து எழுதியிருப்பது அவதூறு. கருத்து விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் நூலிழை வித்தியாசம்தான் உள்ளது. இன்றைக்கு அதை அவர்கள் (திமுக) தாண்டிவிட்டார்கள்.

 

அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் என்பவர் மாநிலத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை பேசக்கூடியவர். தமிழக ஆளுநர் அரசின் செயல்பாடுகளை இதற்குமுன் பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் தமிழக அரசின் பணிகள் குறித்து பாராட்டி பேசினார்.  அப்போது எல்லாம் முரசொலி இந்த ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. எனவே இது நிச்சயமாக அவதூறுதான். இதை நடுநிலையாக செயல்படக்கூடிய எந்த ஒர் சாமானியனும் கண்டிக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை வலுவான ஓர் எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையிலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி, ஆளும் திமுக அரசு செய்கிற எல்லா தவறுகளையும், அதிமுக மக்கள் மன்றத்தில் வைத்து கேள்விகள் எழுப்பி வருகிறது. அதன் மூலம் திமுக தன்னை சரிபடுத்திக் கொள்ள ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக அதிமுக தலைமையில் நாங்கள் அனைவரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறோம். அரசியலில் மிக நுணுக்கமாக செயல்படக்கூடிய கட்சிகளாகவும், ஆக்கபூர்வமான கட்சிகளாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது.” என்று தெரிவித்தார்.

click me!