திருவாரூரில் திமுக கூட்டணி டமார்..? ஒரே வார்டில் முட்டி மோதிக்கொள்ளும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட்.!

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 9:35 PM IST
Highlights

திருவாரூரில் ஒரு வார்டில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாக வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அது மட்டுல்லாமல், தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஊராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல்  அக்டோபர் 9 அன்று நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முடிவடைந்தது. இந்த வார்டில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் வீரமணி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோல திமுக சார்பில் எஸ்.ஆர்.ரமேஷ் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
2019-இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, திமுக கூட்டணியில் இந்த வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போதும் அக்கட்சியின் சார்பில் வீரமணிதான் போட்டியிட்டார். ஆனால், இந்த வார்டில் அதிமுக வேட்பாளர் மகாலிங்கம் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு மரணமடைந்தார். இதனால், இந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட அந்தத் தேர்தல்தான் தற்போது நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட வார்டு என்பதால், வீரமணி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கும்படி அக்கட்சி திமுகவை வலியுறுத்தியிருந்தது. ஆனால், திமுக இதற்கு மறுத்திவிட்டது.
திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால் திமுகவே போட்டியிட வேண்டும் அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதுபோல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தனியாக ஆலோசனை நடத்தி, தனியாகத் தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்தது. இதன்படி இந்த வார்டில் திமுக, சிபிஐ என இரு கட்சிகளின் வேட்பாளர்களுமே போட்டியிட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்ட திமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!