எல்லா திராவிட தலைவர்களும் மெரினாவில் அடக்கம்!! கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது..? நீதிமன்றத்தில் திமுக வாதம்

By karthikeyan VFirst Published Aug 8, 2018, 9:21 AM IST
Highlights

அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு மட்டும் ஏன் அனுமதி கிடையாது? - திமுக தரப்பு வாதம்

அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்போது, கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது? என திமுக வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய, திமுக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த தமிழக அரசு, காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கியது. 

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திமுக சார்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)  ஹூலுவாடி ரமேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில், காலை 10.30 மணி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் காலை 8.30 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்கரையில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் துரைசாமி 4 வழக்குகளும், பாமுக பாலு ஒரு வழக்கும், டிராபிக் ராமசாமி ஒரு வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை காரணம் காட்டி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கக்  கூடாது என துரைசாமி, பாலு ஆகியோர் தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றனர். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு இல்லை என டிராபிக் ராமசாமி தெரிவித்தார். 

இதையடுத்து அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதில் தமிழக அரசை தவிர மற்ற எந்த எதிர்ப்பும் இல்லாத சூழல் உருவானது. இதையடுத்து, மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்ற தலைமை செயலாளரின் அறிக்கைக்கு எதிராக திமுக வழக்கு தொடர முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு, திராவிட சித்தாந்தம் வேறு; எனவே கருணாநிதியின் சித்தாந்தத்தின் அடிப்படையில், மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டர். அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது? என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். 

மேலும் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யாவிட்டால், அது நல்லடக்கமாக இருக்காது எனவும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. 
 

click me!