
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற காரணத்திற்காகவும் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.
இந்த தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்றதாக 21 திமுக எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்ற கலக்கம் திமுகவிற்கு ஏற்பட்டது.
இதையடுத்து அப்படி ஒரு சூழல் உருவானால் என்ன செய்வது? எப்படி சமாளிப்பது என்பன குறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஸ்டாலினின் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.