
காவிரி விவகாரத்தில் கடந்த காலங்களில் தமிழகத்திற்கு செய்த துரோகங்களுக்காக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அரசு, இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
26-ஆவது நாளாக இன்று நீடித்த விசாரணையில் மத்திய அரசின் வாதங்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதுடன், காவிரி விவகாரத்தில் கடமையைச் செய்யத் தவறியதற்காக மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
காவிரி சிக்கலில் கடந்த காலங்களில் தமிழகத்திற்கு செய்த துரோகங்களுக்காக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அரசு, இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்வது தான் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து ஆணையிட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.