
தமிழகம் அடுத்த தலைவராக ரஜினியைத்தான் விரும்புகிறது என்றும் அடுத்த முதலமைச்சர் நடிகர் ரஜினிகாந்த்தான் என்றும் ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த செய்திகள் அண்மை காலமாக வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது, அரசியலுக்கு வருவது குறித்து இலைமறைகாயாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் சில அரசியல் இயக்கங்கள் கூறி வருகின்றன.
நடிகர் ரஜினி அரசியலுக்க வர வேண்டும் என்றும் அவருக்கான அரசியல் தொல்லைகள் நீங்க வேண்டும் என்பதற்காக, சிறப்பு பூஜைகள் அவரது ரசிகர்கள் இன்று நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் இடைக்காட்டு சித்தர் சமாதி உள்ளது. இங்கு நடிகர் ரஜினிகாந்த் படத்தை வைத்து அவரின் ரசிகர்கள் பூஜை செய்தனர். மேலும் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
சிறப்பு பூஜை குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசும்போது, இந்த சிறப்பு வழிபாட்டின் நோக்கமே, ரஜினியும் அவரது குடும்பத்தாரும் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் பிரவேசம் எடுத்திருப்பதில் எந்த தடையும் தடங்களும் வரக்கூடாது என்பதற்காகவும் பூஜை நடத்தப்பட்டதாக கூறினார்.
தமிழக அரசியலில் இன்றைக்கு நடக்கும் கூத்துகளை பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது.
திருச்சியில், தமிழருவி மணியன் நடத்திய மாநாட்டில் கலந்து கொள்ள, தலைமை உத்தரவிட்டது. அதன்படி நாங்கள் கலந்து கொண்டோம். இதுவும் எங்களுக்கான முன்னோட்டம்தான்.
எனவே தமிழகம் அடுத்த தலைவராக ரஜினியைத்தான் விரும்புகிறது. அடுத்த முதலமைச்சர் நடிகர் ரஜினிதான் என்றும் அவர் கூறினார்.