
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த, திமுக தலைவர் கருணாநிதி சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி ரூ.1கோடிக்கான காசோலையை இந்தியாவில் நிதி திரட்டும் எம்.ஆறுமுகம் அவர்களிடம் திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ் இருக்கைக்காக இந்தியாவில் நிதி திரட்டி கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிமன்ற குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் முருகையாவிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
அப்போது, ‘தமிழுக்கு இருக்கை கிடைக்கப் பெறும் அந்த நாள், தமிழகத்தில் உள்ள ஏழரைக் கோடி மக்கள் மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் இன்பத்தேன் வந்து பாயும் நாள்’ என்று வாழ்த்து தெரிவித்தார்.