
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மிகத்தீவிரமடைந்துள்ள நிலையில், தேமுதிக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டெங்கு பாதித்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார் விஜயகாந்த்.
நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு பாதித்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறிய விஜயகாந்த், இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தினமும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் தரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தினமும் 10000 ரூபாய் வரை செலவழிக்கின்றனர். எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது எனவும் இடைத்தேர்தலுக்கு முன்னரே பொதுத்தேர்தல் வரும் எனவும் விஜயகாந்த் தெரிவித்தார். டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக் குழுவால் எந்த பயனும் இல்லை. இவர்கள் ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடியிடம் தான் ஒப்படைப்பார்கள். அதனால் டெங்குவை இவர்களால் ஒழிக்க முடியாது என தெரிவித்தார்.