
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று தில்லி சென்றார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து, விமர்சனங்கள் அரசின் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் தில்லி சென்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு வர இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் மத்திய மருத்துவர்கள் குழு சென்னைக்கு வந்துள்ளது.
ஓபிஎஸ்., துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நேற்று தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, மைத்ரேயன் எம்.பி.யும் உடனிருந்தார். சுமார் 20 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் அளித்தார் ஓபிஎஸ்.
பின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன் என்றும், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னிடம் கொடுத்தனுப்பிய மனுவை பிரதமரிடம் அளித்து, அதுகுறித்து விவரமாக எடுத்துக் கூறினேன் என்றும் கூறினார்.
அப்போது, “டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக் கூடங்கள் தேவையான அளவு திறக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததற்கும், டெங்கு தடுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போர்க்கால அடிப்படையில் அரசு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, “மத்திய அரசின் மருத்துவக் குழுவை தமிழகத்துக்கு அனுப்பி என்னென்ன தேவை என்பதை கண்டறிய உத்தரவு பிறப்பித்திருப்பதாக பிரதமர் என்னிடம் கூறினார்” என்று ஓபிஎஸ்., கூறினார். அதன்படி, மத்தியக் குழு சென்னைக்கு வந்துள்ளது.
சென்னை வந்துள்ள 5 பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினா், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனா். இன்று காலை தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர்கள், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்தக் குழுவில் ஆசுதோஷ் பிஷ்வாஸ் ( இவர் எய்ம்ஸ் மருத்துவர்), சுவாதி துப்லிஸ் (குழந்தைகள் நல மருத்துவர்), கௌஷல் குமார் (பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுபாட்டு மையம்) கல்பனா பர்வா (பூச்சியினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குனர்) வினய் கர்க் (பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசு செயலர்கள் கூட்டத்தில் இந்தக் குழு பங்கேற்ற பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடுவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் எந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்வது; எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்வது என்பது குறித்து இந்த ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஆய்வு குறித்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு குறித்த ஆய்வுக் குழுவை மத்திய அரசே நேரடியாகக் களம் இறக்கியுள்ளது. ‘ஜெயலலிதா இருந்திருந்தால் மத்தியக் குழு வருமா..?’ என்று கேள்வி எழுப்பும் சிலர், ஓபிஎஸ்.,ஸிடம் தகவல் தெரிவிப்பது போல் மோடி மத்தியக் குழுவை அனுப்பி வைக்கும் என்று கூறி அன்று இரவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர்.