
குஜராத்தில் பட்டேல் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். கடந்த 2015-ல் ராஜ்கோட்டில் உள்ள கந்தேரி கிரிக்கெட் மைதானத்தை ஹர்திக் பட்டேல் தன் ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். அன்றைய தினம் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. போலீசார் ஹர்திக்கை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ஒரு வாகனத்தின் மீதேறி நின்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வாகனத்தின் மீது ஏறும்போது ஹர்திக் பட்டேல் தன் வைத்திருந்த தேசியக்கொடி அவருடைய காலில் மிதிபட்டது. இதனால் தேசியக்கொடியை அவமதித்ததாக ஹர்திக் பட்டேல் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கை குஜராத் அரசு நேற்று வாபஸ் பெற்றது.
மேலும், குஜராதத்தில் அடுத்த 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் தேதி வரும் 16ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஹர்திக் படேல் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால், தேர்தலில் படேல் இனத்தவரின் வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனக் கருதி ஆளும் பா.ஜனதா அரசு 2 ஆண்டுகளுக்கு பின் வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.