
அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராவதற்காக கடந்த 6-ம் தேதி ஓபிஎஸ் உள்ளிட்டோர் டெல்லி சென்றிருந்தனர்.
அப்போது பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், மோடிக்கு வேறு அவசர பணிகள் இருந்ததால் அன்று சந்திப்பு நிகழவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து ஓபிஎஸ் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
தொடர்ந்து சென்னை வந்த ஒபிஎஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் பொதுக்குழு எடுக்கும் முடிவுகள் தான் செல்லுபடியாகும் எனவும், ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அதற்கான பணிகளை தொடங்குவோம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.