குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000… தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்!!

By Narendran SFirst Published Dec 6, 2021, 6:41 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டும் என தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த தொகுப்பில் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடி 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை பொங்கலுக்கு பணம் வழங்கவில்லை. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 2 கோடியே 7 லட்சம் ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, இரு தவணைகளில் தலா 2000 வழங்கப்பட்டது. எனவே இந்த முறை பொங்கலுக்கு பணம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க தேமுதிகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை முதல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் 7 ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதனையடுத்து பலர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 வழங்க வேண்டும்,  வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

click me!