கரூர் மாநகராட்சி, புலியூர் உப்பிடமங்கலம் புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பேரூராட்சிகளில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அப்போது பேசிய அவர், ‘தேமுதிகவை பொருத்தவரை பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில்லை ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மத்தியில் என்ன செய்வோமோ அதை வாக்குறுதிகளை கொடுத்து வருகிறோம்.
கரூரில் ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்கள் இல்லையா என்று தெரியவில்லை? மற்ற கட்சி வேட்பாளர்கள் வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகின்றனர். தமிழகத்தில் எத்தனை கட்சி உள்ளது என கரூரில் உள்ள மந்திரியை கேட்டால் சரியாக சொல்வார் அத்தனை கட்சிக்கும் சென்று வந்தவர் தான் இந்த கரூர் அமைச்சர் சொல்லமுடியாது சீக்கிரத்துல தேமுதிகவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்.
யாருடைய குறைகளையும் சுட்டிக்காட்டி தேமுதிகவுக்கு ஓட்டு வாங்கும் அவசியம் கிடையாது. ஆனால் நடக்கும் அவலங்களை சொல்ல வேண்டியது கடமையாகும். மக்களை முட்டாளாக நினைத்து அவர்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதி தருபவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் பணபலம் அதிகாரம் பலம் இருப்பது என்பதற்காக மக்களை ஏமாற்றிவிடலாம் என கனவு காண்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தையே கேப்டன் மாற்றி இருப்பார். இன்னும் எங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டது அந்த நோக்கத்தை தேமுதிக செய்து முடிக்கும்’ என்று பேசினார்.