வெற்றிக்கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக... ஜி.கே.வாசன் வருத்தம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2021, 11:35 AM IST
Highlights

அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை தொகுதி பங்கீடு முழுமையாக முடியவில்லை. அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 

தேமுதிக வெற்றிக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை தொகுதி பங்கீடு முழுமையாக முடியவில்லை. அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 மற்ற சிறு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக 5-ல் இருந்து 7 தொகுதிகள் வரை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ’’எங்களை பொறுத்தவரையில் வெற்றிக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் தொகுதி ஒதுக்குவது சம்பந்தமாக உரிய அவகாசம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாகதான் தொகுதி ஒதுக்கீடு தாமதமாகிறது. முக்கிய கட்சி ஒன்று (தே.மு.தி.க.) கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் வெளியேறிவிட்டதால் பேச்சுவார்த்தை முடிவதற்கு தாமதமாகிவிட்டது. விரைவில் இதில் நல்ல முடிவு ஏற்படும்.

நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி நாங்களாக முடிவு எடுத்துவிட முடியாது. தேர்தல் கமி‌ஷனும், கோர்ட்டும் தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் குறிப்பிட்ட சின்னத்தில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வோம். தே.மு.தி.க. தனது நிலைபாட்டை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் அவர்கள் வெற்றிக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது’’எனத் தெரிவித்தார்.

click me!