நாளை முதல் விஜயகாந்த் பிரசாரம்... விரைவில் வெளியாகிறது சுற்றுப்பயண திட்டம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 23, 2021, 2:15 PM IST
Highlights

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் எனக்கூறப்பட்டது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய தேமுதிக இறுதியில் கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தது. அதன் பின்னர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி இறுதியானது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் என ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்த் உடல் நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியானது. 

தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேமலதா, எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் போது விருத்தாச்சலத்தில் பிரேமலதா மட்டுமே போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. கணவர் விஜயகாந்த்முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுவது தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் எனக்கூறப்பட்டது. சமீபத்தில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரனும் அவரை பரப்புரையில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜயகாந்த் நாளை மறுநாள் திருத்தணியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அமமுக கூட்டணி சார்பில் தேமுதிக திருத்தணி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வருகிற 25ம் தேதி மாலை 6 மணிக்கு பொதட்டூர்பேட்டையில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!