
அமைச்சர்களை நம்பி அதிமுக இல்லை என்றும் தொண்டர்களை நம்பிதான் உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை இன்று மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்குகிறார். மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக மறைமுக அரசியலை மட்டுமே மேற்கொண்டு வந்த திவாகரன், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர் சில ஆலோசனைகளையும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதன் மூலம் முதல் முறையாக நேரடியாக கட்சியினருடன் நின்று ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர்கள் வருவார்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திவாகரன், அமைச்சர்களை நம்பி அதிமுக கட்சி இல்லை என்றும் அடிமட்டத் தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது என்றும் கூறினார்.
அமைச்சர் பதவி என்பது காற்று அடைக்கப்பட்ட பலூன் போன்றது. அமைச்சர்கள் பதவிக்கெல்லாம் தற்போது மரியாதை கிடையாது என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரன் திட்டமிட்டிருக்கும் 9 பொதுக்கூட்டங்களும் முடிந்தபிறகுதான் தொண்டர்களின் ஆதரவு டி.டி.வி.தினகரனுக்கு உள்ளதா என்பது குறித்து தெரியும் என்றும் திவாகரன் கூறினார்.