துரை வைகோவிற்கு மதிமுகவில் தலைமை பொறுப்பு..! எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்களை அதிரடியாக நீக்கிய வைகோ..

By Ajmal KhanFirst Published Apr 29, 2022, 1:10 PM IST
Highlights

மதிமுவில் தலைமை பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்ட செயலாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக நீக்கியுள்ளார்.
 

துரை வைகோவிற்கு எதிர்ப்பு

மதிமுகவில் தலைமை பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு ஒரு சில மூத்த  தலைவர்கள் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக கட்சியை ஆரம்பித்து விட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளதாக   சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும், மதிமுக ஒரு சில மூத்த தலைவர்களும்  குற்றம் சாட்டினார். எனவே திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு துணை செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில்  அந்த பதவி முருகன் மற்றும் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. மேலும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 24 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கிய தீர்மானமாக  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்

இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!