ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி.. இலங்கைக்கு உதவி.. முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 29, 2022, 1:07 PM IST
Highlights

மத்திய அரசின் அனுமதியோடு தான் இதனை நாம் அனுப்ப முடியும். எனவே தேவையான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே  கடிதம் எழுதி உள்ளேன். 

இலங்கை தமிழர்களுக்கு உதவ 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்பில் மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் பால் பொருட்கள் வழங்க தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கையில் நிர்வாக குளறுபடி காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில்  சிக்கியுள்ளது. நாடு முழுவதும் திவாலாகி உள்ளது. உணவு  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அண்டை நாடுகளை சார்ந்திருப்பதால் அங்கு வரலாறு காணாத உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. பணம் இருந்தாலும் கடைகளில் பொருட்கள் இல்லாததால் மக்கள் பசி பட்டினியில் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் நல்லெண்ண அடிப்படியில் முன்வந்து இலங்கைக்கு கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார உதவிகளையும், உணவுப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் பசி பட்டினியை எதிர்கொள்ள முடியாமல் அங்குள்ள தமிழர்கள் கடல் மார்க்கமாக தமிழகத்தின் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது.  உணவு, மருந்து பொருட்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளது. கடந்த மாதம் மட்டும் 100 கோடி டாலர் கடனுதவியும் செய்துள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் டாலர் கடனுதவி வழங்க உள்ளது. மத்திய அரசு உதவி செய்யும் இதே நேரத்தில் அங்கு உள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் அப்பொருட்களை அனுப்பி வைக்க இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதற்கான பதிலும் வரவில்லை, இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவும் நோக்கில் மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்து முன்மொழிந்தார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனித மாண்போடு உதவிடும் நோக்கில் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது. 80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்கள். 15 கோடியில் பால் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.

மத்திய அரசின் அனுமதியோடு தான் இதனை நாம் அனுப்ப முடியும். எனவே தேவையான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே  கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் வரவில்லை. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை கடும் எங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க  தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது  தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

click me!