
அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிகளை மதிக்காத புதுச்சேரி ஆளுநர் கிரண் பெடி, மேற்கு வங்காள ஆளுநர் கே.சி. திரிபாதி ஆகியோரை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கேள்விக்குறி
அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் அல்லது புதுச்சேரியாக இருந்தாலும் சரி. மத்தியில் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவிக்கு வந்ததில் இருந்து, மாநிலத்தில் ஆளுநர்களை நியமனம் செய்யும் முறை என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் அரசியல் பொம்மைகளாக ஆளுநர்கள் இருக்கிறார்கள்.
நெறிகளை மீறி
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பெடி, தேர்தலில் தோல்வியுற்ற 3 பா.ஜனதா வேட்பாளர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆளுநருக்கு கூறப்பட்டுள்ள நெறிகளை மீறி கிரண்பெடி, திரிபாதி ஆகியோர் நடக்கிறார்கள். அவர்கள் இருவரையும் மத்திய அரசு திரும்பப் பெற்று, நீக்க வேண்டும்.
இதில் மேற்குவங்காள மாநிலத்தின் ஆளுநர் திரிபாதி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வரிடம் மிகவும் மரியாதைக் குறைவாக, அசிங்கப்படுத்தும் விதமாக, தகுதிக்குறைவாக நடந்துள்ளார்.
அவமானப்படுத்துவது
இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் இப்படி ஒரு சார்பாக நடப்பது நிகழ்ந்தது இல்லை. மத்தியில் ஆளும் அரசின் விருப்பத்துக்கு இணங்க, மாநில முதல்வரை உதாசினப்படுத்துவதும், நோகடிக்கும் சம்பவமும் நடக்கிறது. இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.