
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகட்டும் என்பது போல டிடிவி தினகரன் நக்கலாக பதிலளித்தார்.
அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணியாக பிரிந்ததை தொடர்ந்து தற்போது ஒபிஎஸ், இபிஎஸ், டிடிவி என மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக எடப்பாடி அணி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்த்து.
ஆனால் சில நாட்களில் வெளியே வந்த தினகரன் கட்சி பணியில் தொடருவேன் என்றார். இதனால் எடப்பாடி அணி நாடகமாடுவதாக கூறி பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை குழுவை கலைத்தார்.
இதைதொடர்ந்து, பேச்சுவார்த்தை கடைசி நிலையில் உள்ளதாகவும் கண்டிப்பாக இணையும் எனவும் எடப்பாடி தரப்பு அறிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி பேச்சுவார்த்தை நடந்ததா? எனக்கு தெரியாதே.. நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும் என அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்பது போல் நக்கல் அடித்தார்.