
பாஜகவை கண்மூடித்தனமாக தான் எதிர்க்கவில்லை எனவும் பாஜகவின் இது போன்ற செயல்கள் தமிழகத்தில் அக்கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள், விஜயின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுவதாகவும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் எனவும் இந்தியாவில் பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவம் இலவசம்தான் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
விஜயை கிறிஸ்தவர் என சுட்டிக்காட்டும் விதமாக அவரது பெயரை ஜோசஃப் விஜய் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் அமீர், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை நாட்டுக்கு உதவாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என்றும், திரைத்துறையினரை பாஜகவினர் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இது போன்ற செயல்கள் தமிழகத்தில் அக்கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் பாஜக விடும் கட்டளைகளை நிறைவேற்றும் செயலை தான் அரசு செயல்படுத்துகிறது என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.