மெர்சலுக்கு மிரட்டல் விடுப்பதா? : பாஜக., தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்! 

 
Published : Oct 20, 2017, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சலுக்கு மிரட்டல் விடுப்பதா? : பாஜக., தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்! 

சுருக்கம்

marxist communist secretary ramakrishnan condemn bjp leaders for threatening mersal

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., வரி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை உண்மை நிலவரம் அறியாமல் வெறுமனே வாட்ஸ் அப் பார்வர்ட் மெசேஜ்களை வைத்துக் கொண்டு விமர்சித்து  காட்சிகளை வைத்துள்ளதாகவும், இதனை நீக்க வேண்டும் என்றும் பாஜக.,வினர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் நேரடியாகவே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். 

இவ்வாறு பாஜகவினர் மிரட்டும் வகையில் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சித்து காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்க வேண்டுமென்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா, ஜோசப் விஜய் என்று மத ரீதியான சாயம் பூசியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மத்திய அரசை விமர்சித்தால் இந்துக்கள் மெர்சலாகி விடுவார்கள் என்று மோதலை உருவாக்கும் வகையில் பேசியிருந்தார். ஆளும் கட்சியின் நிர்வாகிகள், அரசு எந்திரங்கள் தங்கள் கட்சியின் கையிலிருப்பது போன்று தடிஎடுத்துக் கொண்டு அலைவது வெட்ககரமானது.

மத்திய அரசின் தணிக்கைத்துறையே ஆளும் கட்சியின் கலாச்சார காவலர்கள் போன்று வெறி பிடித்து அலையும் நிலையில் அதையும் தாண்டி வந்த ஒரு படத்திலுள்ள விமர்சனங்களையே தாங்க முடியாமல் படைப்பு சுதந்திரம், மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது குண்டு வீசுகிறார்கள்.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், இவர்களையெல்லாம் மிரட்டுகிற போது தமிழகத்தில் இருக்கும் அரசால் இதைக் காப்பாற்ற முடியாது என்கிற பயமும், அந்த அரசும் மத்திய ஆளும் கட்சியின் மனமறிந்து சேவகம் செய்வதும், திரைப்படத்துறையினரையும் பயம் கொள்ள வைத்திருக்கிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.

பாஜகவின் இந்த மிரட்டல் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. சமூக இயக்கங்களும், பொது மக்களும் ஒரே குரலோடு பாஜகவின் இந்த போக்குக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!