சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்... திண்டுக்கல் சீனிவாசன் செம கலாய்!!

By sathish kFirst Published Jun 9, 2019, 2:15 PM IST
Highlights

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும், அவர் வெளியில் வருவதால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கோ, அமமுகவின் தினகரனுக்கோ அதிமுக கட்சியில் இடமே இல்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும், அவர் வெளியில் வருவதால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்று திடீரென போர்கொடி உயர்த்தினார். அவரின் கருத்துக்கு முதல்வர், துணை முதல்வர் பதிலளிக்க  மறுத்துள்ள நிலையில் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ராஜன் செல்லப்பா கருத்தை மறுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே யூகலிப்டஸ் மரக்கன்று உற்பத்தி செய்யும் இடம் உள்ளது. இதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார்.

இதற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? அ.தி.மு.க-வில் உள்ள இரட்டைத் தலைமையை ஒற்றைத் தலைமையாக மாற்ற வேண்டும் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ராஜன் செல்லப்பா கூறி இருப்பது தவறான ஒன்றாகும். அவரின் கருத்து குறித்து வேறு எந்தப் பதிலும் நான் கூற விரும்பவில்லை. அதிமுகவில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்துப் பேசிய அவர்; தற்போது, இரட்டைத் தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாகவே செயல்படுகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அவர் வெளியே வருவதால், எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ அதிமுக-வில் இடம் கிடையாது. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வந்தால் இணைத்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

click me!