விஸ்வரூபம் எடுத்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை... ஒதுங்கி வழிவிடுவாரா ஓபிஎஸ்..?

By vinoth kumarFirst Published Jun 9, 2019, 12:01 PM IST
Highlights

ஒற்றை தலைமை குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஒற்றை தலைமை குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தலைமை பற்றி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. இரு தலைமைகள் இருப்பதால் முடிவுகள் எடுக்க முடியவில்லை. இதை பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்.” என ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்துகள் அக்கட்சியினர் விவாதிக்கும் முக்கிய பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்கிறேன். ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தும் வரவேற்கக்கூடியது என்றார். 

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 12-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி குறித்தும், திமுக தரப்பிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தை வேகமெடுத்துள்ளது. ஆகையால் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சரிகட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என குரல் எழுந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தற்போது எழுந்து வரும் எதிர்ப்பு குரல்களில் பெரும்பாலானவை ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கு எதிராகவே உள்ளதால் தற்போதைக்கு அதிமுகவை காப்பாற்றும் முடிவில் ஓபிஎஸ் ஒதுக்கி ஓய்வெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

click me!