"அம்மா இருந்திருந்தா வாயை திறந்திருப்பியா சொல்லப்பா.. ராஜன் செல்லப்பா".. கோகுல இந்திரா..!

By vinoth kumarFirst Published Jun 9, 2019, 12:50 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் ராஜன் செல்லப்பா தான்தோன்றித்தனமாக அதிமுக தலைமை குறித்து பேசியுள்ளார் என கோகுல இந்திரா காட்டமாக கூறியுள்ளார். அம்மா இருந்திருந்தால் தைரியமாக இப்படி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் ராஜன் செல்லப்பா தான்தோன்றித்தனமாக அதிமுக தலைமை குறித்து பேசியுள்ளார் என கோகுல இந்திரா காட்டமாக கூறியுள்ளார். அம்மா இருந்திருந்தால் தைரியமாக இப்படி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. எடப்பாடி, ஓ.பி.எஸ் இரட்டை தலைமை இருக்கக்கூடாது. ஒற்றைத்தலைமையே இருக்க வேண்டுமென, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா திடீரென போர்க்கொடி தூக்கினார்.  தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணங்களை ஆலோசித்து, சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை. கட்சிப்பொதுக்குழுவை உடனே கூட்டி கட்சிக்கு ஒற்றை தலைமை அதாவது அதிகாரமுள்ள பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் பேச்சு முறையற்ற குற்றச்சாட்டு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை அதிகாரம் இருப்பதாக இப்போது சொல்லும் இவர், அந்த பதவிகளுக்கு இருவரையும் நியமித்தபோது ஏன் எதிர்க்கவில்லை. அப்போதே எதிர்த்திருக்கலாமே. இத்தனை நாட்களாக அமைதியாக இருந்து விட்டு இப்போது இப்படிச் சொல்ல என்ன காரணம். அம்மா இல்லாததால் இப்படி பேசியுள்ளார். அம்மா இருந்திருந்தால் இவரால் வாயைத் திறந்திருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜன் செல்லப்பா ஊடகங்களில் பேசி கட்சியை பலவீனப்படுத்துவதை விட்டு விட்டு கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் என கோகுல இந்திரா வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு குரலும் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!