இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக நிர்வாகி...! ஓபிஎஸ்யை திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Aug 19, 2022, 9:43 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்த  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி திடீரென ஓபிஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டும் உள்ளனர். இதன்  காரணமாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் மேல் முறையீடு...! உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ்

இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

இந்த உத்தரவு ஓபிஎஸ் அணியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,  கழகம் ஒன்றுபட்டு சனநாயக ரீதியல் தேர்தலை சந்தித்தபோது தமிழகத்தில் எந்த சக்தியும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது சிறிய சிறிய பிர்ச்சனைகளாலும் , எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது.  எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவலுக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

ஓபிஎஸ் அணிக்கு பல்டி அடித்த இபிஎஸ் ஆதரவாளர்

ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது? தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி செயல்பட முடியும்? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்தநிலையில் தேனி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். அப்போது ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இந்த தகவலால் இபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் அணி தரப்பினர் கூறுகையில் இது தொடக்கம் தான் எனவும் விரைவில் ஏராளமானோர் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என கூறினார்.

இதையும் படியுங்கள்

தொண்டர் பலம் இருக்கிறது என்றால் பொதுக்குழுலில் நிரூபிக்கட்டும்! OPS கோரிக்கையை நிராகரித்து சவால் விடும் EPS.!

 

click me!