
இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதில் தினகரனுக்கு கடும் அதிர்ச்சிதான். இருந்தாலும், சின்னத்தை பார்த்து யாரும் ஒட்டுப் போடுவதில்லை என்று ஒரு வழியாக சமாளித்து வருகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை அழைத்து தேர்தல் பணிகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளார் தினகரன்.
திமுக வேட்பாளர் தேர்வு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதில் தமக்குள்ள வருத்தத்தை அப்போது அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வெளி மாவட்டங்களில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வருபவர்களை, கடந்த முறை பணியாற்றிய வார்டுகளில் இருந்து, வேறு வார்டுகளில் பணியாற்ற சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் உள்ள பன்னீர் ஆதரவாளர்களிடம், எக்காரணம் கொண்டும் நம்மவர்கள் சந்திக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் தேவை என்றும் எச்சரித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில், பன்னீரையோ, தீபாவையோ யாராவது ஒருமுறை சந்தித்து இருந்தால் கூட, அவர்கள் பிரச்சாரத்திற்கு வரக் கூடாது என்று அழுத்தமாகவே கூறினார்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும், யாராவது சிக்கிக் கொண்டால் தேர்தலே நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
எல்லாவற்றையும் விட, அதிமுக ஓட்டுக்கள் கொஞ்சம் கூட பன்னீர் பக்கமோ, தீபா பக்கமோ சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்போடு தினகரன் அமைச்சர்களுக்கு கூறி உள்ளார்.