
தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த தீபாவிற்கு, தண்டையார்பேட்டையில் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று ஆரம்பம் முதலே சொல்லி வந்தவர் தீபாதான்.
அப்போதெல்லாம் அதிமுகவுக்கும்-தீபாவுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் பிப்ரவரி 7 ம் தேதி, அம்பியாக இருந்த பன்னீர் அந்நியனாக மாறி, சசிகலா தரப்புக்கு சிம்ம சொப்பனமாக மாறுவார் என்றும், அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு பெருகும் என்றும் யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதனால், அதுவரை அதிமுக தொண்டர்கள் மத்தியில் முதலிடத்தில் இருந்த தீபா, தற்போது தினகரன், பன்னீரைவிட கூடுதலாக வாக்குகளை பெறுவாரா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
இருந்தாலும், ஜெயலலிதாவின் ரத்தம் அல்லவா? சொன்ன சொல்லை மீறாமல், வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு நேரடியாக பிரச்சாரத்தில் குதித்துவிட்டார்.
வெயிலையே காணாத பெண்ணாக வளர்ந்த தீபா, தண்டையார்பேட்டை வீதியில் இறங்கி, மக்களோடு மக்களாக சங்கமித்து பிரச்சாரம் செய்யும்போது, அவருக்கு கடுமையாக வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
அதைக்கண்டு பதறிப் போன தொண்டர்களில் சிலர், தங்கள் தொழில் இருந்த துண்டை எடுத்து, அவருக்கு விசிற ஆரம்பித்து விட்டனர்.
அதைக்கண்டு நெகிழ்ந்த தாய்குலங்கள், என்னம்மா செய்யிறது..தினகரனுக்கு தொப்பி இருக்கிறது, தீபாம்மாவிற்கு என்ன இருக்கிறது? என்று "உச்" கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் அங்கிருந்த தீபா உள்பட அனைத்து தொண்டர்களும், செண்டிமெண்ட் மழையில் நனைந்து விட்டனர். ஆரம்பமே அமர்க்களம்தான் போங்க...