
சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் பரோல் வழங்கியுள்ள நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் சிறையிலிருந்து வெளிவர உள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிருக்குப் போராடிவந்த நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆனாலு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவரைக் காண்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலா, பரோல் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார். முறையான ஆவணங்கள் இல்லையென ஏற்கனவே சசிகலாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து முறையான ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்தார்.
சசிகலாவை பரோலில் விடுவதற்கு சென்னை காவல்துறை தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து கடுமையான நிபந்தனைகளின் அடிபடையில் அவரை பரோலில் வெளிவிட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் வெளிவர உள்ள சசிகலாவை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக சிறை வாசலிலேயே காத்திருக்கிறார் தினகரன்.
பெங்களூருவில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால் இன்று மாலை விமானம் மூலம் சசிகலா சென்னை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.