
முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் பல எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் முதல்வர் பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர். தேவையான நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் என தினகரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்த ஸ்லீப்பர் செல்கள் யார் என்ற கேள்வி தொற்றிக்கொண்டது. இந்நிலையில் பரோலில் வெளிவந்துள்ள சசிலாவை அமைச்சர்கள் சிலர் சந்திக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் விதித்த கடுமையான நிபந்தனைகள் விதித்ததால் யாரும் சசிகலாவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் சில அமைச்சர்கள், சசிகலாவை போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் சசிகலாதான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பரோலில் சசிகலா வெளிவந்துள்ள நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ குரல் கொடுத்ததால் அவரும் ஸ்லீப்பர் செல்களில் ஒருவர் என தகவல் பரவத் தொடங்கியது.
அந்த தகவலுக்கு வலுசேர்க்கும் வகையில் தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதியும் ஸ்லீப்பர் செல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டார்கள் என தெரிவித்தார்.
தான் ஒரு ஸ்லீப்பர் செல் என தகவல் பரவிவருவதை அடுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தான் ஸ்லீப்பர் செல் இல்லை என கண் கலங்கியபடி தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், முதல்வர் பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது உண்மைதான். ஆனால் செல்லூர் ராஜூ ஸ்லீப்பர் செல் இல்லை. ஆனால் ஸ்லீப்பர் செல்கள் யார் என்பதை சொல்லமுடியாது என தெரிவித்தார்.