என்கிட்ட பெருசா எதிர்பாக்குறாங்க போல..? தினகரன் கிண்டல்..!

First Published Nov 11, 2017, 1:00 PM IST
Highlights
dinakaran teased about income tax raid


தன்னுடைய தொழில் விவரங்கள் தெரியாமல் தன்னிடம் எதையோ பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் போல என தினகரன் கிண்டலடித்துள்ளார்.

போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் தொடங்கிய சோதனை இன்று மூன்றாவது நாளாக, 40 இடங்களில் நடந்துவருகிறது. முதல் 187 இடங்களிலும் இரண்டாவது நாளான நேற்று 147 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், கோடநாடு பங்களா, கர்சன் எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை, சென்னை திநகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீடு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது.

வருமான வரி சோதனை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என தினகரன், திவாகரன் ஆகியோர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சியைக் காப்பாற்ற நினைப்பதால் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.

வருமான வரித்துறை சோதனையை தனது குடும்பத்தினர் அனைவரும் அவரவர்களே எதிர்கொள்வார்கள் என தினகரன் தெரிவித்தார். எங்கள் குடும்பத்தினரை கடந்து, பெங்களூரு புகழேந்தி வீடு, இதுவரை அமைச்சராக இருந்திராத தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளரின் வீடு, தஞ்சையில் உள்ள கட்சிக்காரரும் வழக்கறிஞருமான வேலு கார்த்திகேயனின் வீடு ஆகிய இடங்களிலெல்லாம் எதற்காக சோதனை நடத்தப்படுகிறது? 

எங்கோ எப்போதோ ஒருமுறை சந்தித்தவர்களின் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்படுவதால்தான் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் சோதனை என்பது உறுதியாகிறது.

நான் அரசியலுக்கு வருவது முன்பே என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. 1999 மக்களவைத் தேர்தலில் தான் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஆனால் அரசியல் ஈடுபாட்டிற்கு முன்பே என் மீது சோதனை பாய்ந்தது. அப்போதும் நான் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதை எதிர்கொண்டேன். அரசியலுக்கு வருவது முன்பிலிருந்தே நான் சொந்தமாக தொழில் செய்துவருகிறேன்.

என்னுடைய தொழில் என்ன? என்பதற்கு எல்லாம் அப்பாற்பட்டு அதைவிட பெரிதாக என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் போல் உள்ளது. அதனால்தான் என் பண்ணைவீட்டில் சோதனை நடைபெறுகிறது என தினகரன் கிண்டலாக தெரிவித்தார்.
 

click me!