
கூவத்தூர் கும்மாளங்கள் எல்லாம் முடிந்த பின்னர், கிரீன்வேஸ் சாலையில் சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக தொண்டர் ஒருவரை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அவரது ஆட்களும் ரவுண்டு கட்டி அடித்த கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் போஸ்டரில் இருந்த சசிகலா படம் ஒன்றை கிழித்தவருக்கு, தர்ம அடி கொடுக்காமல், பணம் கொடுத்து தினகரன் அணியினர் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
ஆர்.கே.நகர் வேட்பாளராக தினகரன் களமிறங்கிய நாளில் இருந்தே, சசிகலாவின் பெயரோ, படமோ எந்த இடத்திலும் இடம்பெற கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.
சசிகலா மீதான மக்களின் வெறுப்பு, தமக்கு இடையூறாக அமைந்து விடும் என்பதால், அவர் ஜெயலலிதாவின் பெயரை மட்டுமே சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது தேர்தல் அலுவலகம் அருகில், ஜெயலலிதாவும்-சசிகலாவும் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்று இருந்துள்ளது.
அது சசிகலா எதிர்ப்பு தொகுதிவாசி ஒருவர் கண்ணில் பட, அதை கிழித்து எறிந்துள்ளார். அப்போது அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள் சிலர், ஆத்திரத்துடன் அவர் அருகே சென்றுள்ளனர்.
அவர்கள், அடித்து விடப்போகிறார்கள் என்ற அச்சத்தில் போஸ்டர் கிழித்தவர் நிற்க, அவர் அருகில் சென்று உடன் வந்த திடீர் ஞானோதயத்தால், அடிக்காமல், பாக்கெட்டில் இருந்த சில ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.
அதனால் குழம்பிப்போன போஸ்டர் கிழிப்பு பார்ட்டி, பணம் கொடுத்தவர்களுக்கும், போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்திற்கும் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையை கட்டி இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் அவரை அடித்தால் பிரச்சினை வரும் என்று யோசித்தார்களா? அல்லது, தங்கள் கண்ணில் படாமல் இவ்வளவு நாள் டிமிக்கி கொடுத்து வந்த சசிகலா போஸ்டரை கிழித்த சந்தோசத்தில் பணம் கொடுத்தார்களா? என்று குழம்பி போயுள்ளனர் அந்த பகுதி மக்கள்.
எப்போதும் மன்னிப்பு அளி - தேவை பட்டால் சில்லறையை வெட்டு என்ற தினகரன் அணியின் அணுகுமுறை சற்று வித்தியாசமாகத்தான் தெரிகிறது.