
ஆர்.கே.நகரில் எந்த கொம்பனாலும் தமது வெற்றியை தடுக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லி, வேட்டையாடு விளையாடு என ஆட்டம் போட்டு வருகிறார் தினகரன்.
வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு 4 ஆயிரம் வீதம், வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில் தங்கு தடையின்றி அவர் தரப்பில் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக, காமாட்சி விளக்குகளை விநியோகித்த தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பண விநியோகம் செய்த தினகரன் ஆதரவாளரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அதையும் மீறி நேற்று ஒரே இரவில் மட்டும் விடிய, விடிய எட்டு மணி நேரம் 60 கோடி ரூபாய் அளவுக்கு பண விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு நன்றாக தெரிந்தும், அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, தடுத்து நிறுத்துவதில்லை என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
நள்ளிரவு, அதிகாலை என தினகரன் ஆதரவாளர்கள் பண விநியோகம் செய்வதை தடுத்து நிறுத்த முற்படும் திமுகவினர், கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
அவ்வாறு, நிகழ்ந்த தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்ட திமுக மாணவர் அணியை சேர்ந்த இரண்டு பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆட்சியே, எங்கள் கையில் இருக்கும்போது, யாரால் என்ன செய்து விட முடியும்? என்ற கோதாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், அதிகாரிகள் என அனைவரும், இதுவரை இல்லாத அளவில் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
தினகரன் தரப்பில் மட்டும் இதுவரை 128 கோடி ரூபாய்க்கு மேல் பணமாகவும், பரிசு பொருளாகவும் செலவிடப்பட்டுள்ளது.
வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டுள்ள தினகரன், இன்னும் எத்தனை கோடியை வேண்டுமானாலும் கொட்டுவதற்கு தயாராகவே இருக்கிறார்.
அவர் மீது, திமுக, பாஜக, ஓ.பி.எஸ், சி.பி.எம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளன.
ஆனாலும், இந்த கோடி போதுமா? இன்னும் கோடி வேணுமா? என்பது போல ஆர்.கே.நகர் தொகுதியில் பனமழை பொழிந்து வருகிறார் தினகரன்.
தம் மீது, யார் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எந்த கொம்பனாலும், தமது ஆர்.கே.நகர் வெற்றியை தடுக்க முடியாது என்றும் கொக்கரித்து வருகிறார் தினகரன்.