
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு திருவள்ளூர், ஈரோடு மற்றும் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக டிடிவி தினகரன் ஆதரவாளர்களை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர், ஈரோடு, மதுரை புறநகர் தினகரன் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொர்பாக அதிமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 44 நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 8 நிர்வாகிகள் மற்றும் மதுரை புறநகர் பகுதிகளை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் உட்பட 61 நிர்வாகிகள் என மொத்தம் 113 நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அற்புதவேல் மற்றும் நாரணம்மாள்புரம் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமுஸ் ஆர்.பி.முருகன் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்படுகின்றனர் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.