
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. அதுவும், இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக., கட்சியும் இவர்கள் வசம் வந்துள்ள நிலையில், இன்னமும் பழைய உறுதியுடன் உலா வருகிறார் தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்.
இப்போதும் அதிமுக.,வுக்கு பொதுச் செயலாளர் சசிகலா தான் என்று அடித்துக் கூறி அடம் பிடித்து வருகிறார் தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்.
அதிமுக., கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் என்று கூறும் தங்க தமிழ்ச்செல்வன்,
கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் எதுவும் கூறவில்லை என்றும், 29ஆம் தேதி அதிமுக அணி வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார் என்றும் கூறுகிறார். ஆனால், தினகரனுக்கும் அதிமுக.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை இருந்து வரும் நிலையில், இன்னமும் அதிமுக., கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன்தான் என்று அவர் கூறி வருகிறார்.
டி.டி.வி. ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கட்சி, சின்னம் இரண்டைப் பற்றி மட்டுமே தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று நம்பிக்கையுடன் கூறினார். முன்னதாக, தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார் தினகரன். ஆனால், அவர் தனிக்கட்சி தொடங்கக் கூடும் என்று செய்திகள் உலவின என்பது குறிப்பிடத்தக்கது.