
பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக ஆர்.கே.நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் காலை 9 மணிவரை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓராண்டாக காலியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா புகார் காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டது.
எனவே, இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளி மாவட்ட வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லக்கூடாது எனவும் முன் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு துணை ராணுவப்படை வீரரை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா பெரும்பாலும் இரவு நேரத்தில் செய்யப்படுவதால், அதைத்தடுக்கும் வகையில், மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.