
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிவிட சொன்னால், இப்போது கூட அரசியலையும் கட்சியையும் விட்டு ஒதுங்கி என் வேலையை பார்க்க தயார் என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தன்னை மூட்டைப்பூச்சி என விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாரை டெங்கு கொசு என விமர்சித்தார். மேலும் காமெடியன் ஜெயக்குமாரின் கருத்து தொடர்பாக கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் கிண்டல் செய்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள், பாஜகவை கண்டு பயந்து கிடக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதற்கான மனத்துணிவு எங்களுக்கு உள்ளது என தினகரன் தெரிவித்தார்.
இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தினகரனுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில், உங்கள் குடும்பத்தில் சிலர், உங்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறதே, அவர்களுடன் இணக்கமாக செயல்படுவது குறித்து தினகரனிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு, எங்கள் குடும்பத்தில் ஒருவரை அரசியலில் ஈடுபடுத்த நினைத்த ஜெயலலிதா, என்னை தேர்ந்தெடுத்தார். 1998ல் என்னை மக்களவை தேர்தலில் நிறுத்தி எம்பி ஆக்கினார் ஜெயலலிதா.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இயங்கிவந்த என்னை அரசியலை விட்டு ஒதுங்கியிருக்குமாறு ஜெயலலிதா பணித்ததை அடுத்து நான் ஒதுங்கிவிட்டேன். பின்னர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை எனக்கு இருந்ததே கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, சிறை சென்றபோது, கட்சியை கவனிக்குமாறு என்னை பணித்தார். துணை பொதுச்செயலாளராகவும் என்னை நியமித்தார். அதன்பிறகே அரசியலில் நான் ஈடுபட்டேன். இப்போதும் எனக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்ற வேட்கையில் தீவிரமாக செயல்படுகிறனே தவிர, எனக்கு அரசியல் ஆசையெல்லாம் பெரிதாக கிடையாது. தொண்டர்களும் சசிகலாவும் என்னை அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சொன்னால், உடனடியாக அரசியலை விட்டு விலகி என் வேலையை செய்ய நான் தயார் என தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.