
வாய்க்கு வருவதை எல்லாம் பிதற்றும் பழனிசாமி, முதல்வர் பதவிக்கே தகுதியில்லாதவர் என தினகரன் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக கட்சியில் இல்லாமல் இருந்த தினகரன், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகே கட்சிக்கு மீண்டும் வந்தார். எனவே அவருக்கும் கட்சிக்கும் தொடர்பே கிடையாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 1999 மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்வானேன். அதன்பின், தற்போதைய அமைச்சர்களாக இருக்கும் சிலர் சதி செய்து, எங்கள் குடும்பத்தை ஜெயலலிதாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக பொய் குற்றச்சாட்டுகளை ஜெயலலிதாவிடம் கூறினர். அதை நம்பி, என்மீது பொய் வழக்கு போடப்பட்டது.
பழனிசாமி வாய்க்கு வருவதை எல்லாம் பிதற்றுகிறார். அதிமுக போன்ற பெரிய கட்சியில் எப்போதும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துவிடாது. அப்படி பார்த்தால் 2001 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமிக்கு ஏன் சீட் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர் ஒதுக்கப்பட்டுவிட்டார் என்று அர்த்தமா? வாய்ப்பு கொடுக்கப்படாததாலேயே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை என தினகரன் தெரிவித்தார்.