
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை செல்லும் என தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதி சுந்தரோ, சபாநாயகர் உத்தரவில் ஹைகோர்ட் தலையிடலாம் என கூறியதோடு, சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இவ்விரு நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரியானது என்பதை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் பொறுப்புதான் 3வது நீதிபதிக்கு செல்கிறது. அவர் மீண்டும் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தாமல், தீர்ப்புகளை மட்டுமே ஆய்வு செய்து தனது தீர்ப்பை வெளியிடலாம். தேவைப்பட்டால், விசாரணையும் நடத்தலாம். புதிதாக முதலில் இருந்து விசாரணை நடத்தாமல், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கினால், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம்.
இந்நிலையில், தினகரன் தனது வீட்டுக்கு இன்றும் சில எம்.எல்.ஏ.க்களை வரவழைத்துப் பேசினார். இந்த கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி உட்பட சிலர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அப்போது பேசிய தினகரன், ‘காலத்தைக் கடத்துவதற்காகத்தான் இப்படி ஒரு தீர்ப்பை திட்டம் போட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள். அவங்க ப்ளான்படி எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு இதை இழுத்துடலாம் என்று கணக்குப் போடுறாங்க. இவங்களோட முடியடிக்க நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அவங்க இனி என்ன உங்களை தகுதி நீக்கம் செய்வது? நீங்களே ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டால் என்ன? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நீங்கள் கடிதம் கொடுத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் அவர்களுக்கு வேறு வழியே இல்லை.
அப்படி ஒரு எம்.எல்.ஏ. ராஜினமா செய்துவிட்டால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்தியாக வேண்டும். ஆனால், இப்போதைக்கு எல்லோரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வேண்டாம். யாராவது ஒருத்தர் முதல்ல ராஜினாமா கடிதம் கொடுங்க. அவங்க ரியாக்ஷன் என்னன்னு பார்க்கலாம். அதுக்கு பிறகு மற்றவங்க ராஜினாமா செய்வதை பற்றி கலந்து பேசி முடிவு செஞ்சிக்கலாம்.
18 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டால், எப்படியும் அந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தியே ஆகணும். அப்படி தேர்தல் நடத்தினால், அந்தத் தேர்தலில் எப்படி ஜெயிக்கிறதுன்னு எனக்கு தெரியும். 18 தொகுதியிலும் அதே வேட்பாளர்கள் போட்டியிடுங்க. செலவுகளை நானே பார்த்துக்குறேன்.ஒரு தொகுதியில்கூட அதிமுக டெபாசிட் வாங்காது. வாங்க விடக் கூடாது...’ என்று சொல்லியிருக்கிறார்.