
நான் காந்தியின் பேரன் கிடையாது; ஆனால் அதேநேரத்தில் என்னை குற்றம்சொல்லுபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா? என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
நேற்று முன் தினம் தொடங்கிய சோதனை இன்று மூன்றாவது நாளாக, 40 இடங்களில் நடந்துவருகிறது. முதல் 187 இடங்களிலும் இரண்டாவது நாளான நேற்று 147 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
வருமான வரி சோதனை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என தினகரன், திவாகரன் ஆகியோர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வருமான வரித்துறை சோதனை என்பது பொதுவான நடவடிக்கை தான். அதேசமயத்தில் ஒரே நேரத்தில் 1800 அதிகாரிகளைக் கொண்டு 187 இடங்களில் சோதனை செய்து மெகா ரெய்டாக காட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? இதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே இது அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட சோதனை தான்.
எங்கள் குடும்பம் என்பது ஒரு சின்ன குழு தான். 1996-ம் ஆண்டிலேயே எங்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போதும் கூட வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அதேபோல் இப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் 1800 அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பத்தினர் எப்போதோ எங்கோ சந்தித்தவர்களின் வீடுகளில் எல்லாம் ஏன் சோதனை நடத்த வேண்டும்?
என்னை காந்தியின் பேரனா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் காந்தியின் பேரன் கிடையாதுதான். ஆனால் அதேநேரத்தில், என்னை குற்றம்சொல்லுபவர்கள் எல்லாம் யார்? காந்தியின் பேரன், பேத்திகளா? என தினகரன் அதிரடியாக கேள்வி எழுப்பினார்.