
சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துத் தேர்தல் பணியை வேகப்படுத்தி வருவதுடன் வேட்பாளர்களையும் தேர்வுசெய்துள்ளார்
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 150 சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துத் தேர்தல் பணியை வேகப்படுத்தி வருவதுடன் வேட்பாளர்களையும் தேர்வுசெய்துள்ளார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத்துக்கும் 2019ஆம் ஆண்டிலேயே தேர்தல் வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. எனவே இரு தேர்தல்களுக்குமே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
தேசிய கட்சியான பாஜகவைப் பொறுத்தவரை அதன் தலைவர் அமித் ஷா தேர்தலைச் சந்திப்பது தொடர்பாகத் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். ஆளும்கட்சியான அதிமுகவுக்கு ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே நேரம் சரியாக உள்ளதால், தேர்தல் பணிகளை இன்னமும் தொடங்காமல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
ஆனால், அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனோ சத்தமில்லாமல் தென்மாவட்டங்களில் 120 தொகுதிகளையும், வடமாவட்டங்களில் 30 தொகுதிகளையும் தேர்வுசெய்து ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்து ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து பூத் கமிட்டி அமைத்துத் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகிறார். மேலும், தொகுதிக்கு மூன்று பேர் என 150 தொகுதிகளுக்கும் வேட்பாளர் லிஸ்டை தயார் செய்துவைத்துள்ளார் தினகரன்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் அவர் ஆலோசித்து வருகிறார். நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், வரும் தேர்தலில் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அபார வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார்.