
இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்த டிடிவி.தினகரன், செல்போனில் அழைப்பு வந்ததும், திடீரென மும்பை புறப்பட்டு சென்றார். இதனால், உடனே அவர் மும்பை புறப்பட்டு சென்றதால், டிடிவி.தினகரனை அழைத்தது யார் என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. இதனால், கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து சின்னத்தை மீட்கும் விவகாரத்தால், இரு அணியும் மீண்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து இருஅணிகளும் இணையாமல் இருப்பதால், நானே கட்சியை வழி நடத்துவேன் என கூறினார். இதையொட்டி எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், எடப்பாடி அணியினருக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நீண்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை டிடிவி.தினகரன், திடீரென மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவரது இந்த திடீர் பயணம், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, டிடிவி.தினகரனின் ஆதரவு அதிமுகவினர் கூறுகையில், “இன்று காலை வழக்கம்போல் டிடிவி.தினகரன், கட்சியினருடன் ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை பேசி கொண்டிருந்த அவர், விமான நிலையம் சென்றார்.
அங்கிருந்து 7 மணி விமானத்தில் அவர் மும்பை புறப்பட்டு சென்றார். மும்பையில் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திக்கவே அவர் சென்றுள்ளதாக தெரிகிறது என்றனர்.