
தமிழக அரசியலில் தினகரன் எதில் சாதித்தாரோ இல்லையோ! ஒரு டிரெண்டை செட் செய்த பெருமை அவரையே சேரும். ‘ஸ்லீப்பர் செல்’ எனும் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியவர் தினகரன்தான். ’எடப்பாடி - பன்னீர் அணியில் எங்கள் அணியின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஸ்லீப்பர் செல்களாக அமைதியாக இருக்கும் அவர்கள். தேவைப்பட்ட நேரத்தில் எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள்.’ என்று ஒரு பட்டாசு ஸ்டேட்மெண்டை விடுத்தார்.
இப்போது அ.தி.மு.க. மட்டுமில்லாது லெட்டர் பேடு கட்சிகள் கூட ‘ஸ்லீப்பர் செல்’ எனும் பதத்தை பயன்படுத்தி பாலிடிக்ஸ் செய்ய துவங்கியுள்ளன.
இந்நிலையில் தினகரன் இப்படியொரு கான்செப்டை அறிமுகப்படுத்தி பல வாரங்கள் ஓடிவிட்டன. இதற்கிடையில் அ.தி.மு.க.வினுள் பல விவகாரங்கள் கிளம்பி அடங்கிவிட்டன. சசிகலா அணி கவனிக்கத்தக்க சரிவையும் சந்தித்தாகிவிட்டது. ஆனால் தினகரன் சொன்னது போல் எந்த ஸ்லீப்பர் செல்லும் வெளிப்படவுமில்லை, எடப்பாடி அணிக்கு ஷாக் கொடுக்குமளவுக்கு எந்த காயத்திலும் அவர்கள் ஈடுபடவுமில்லை.
இந்த சூழலில் நேற்று தினகரனிடம் இந்த ஸ்லீப்பர் செல்களை பற்றி சற்று விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ‘நீங்க ரொம்ப காலமா சொல்லிட்டிருக்கிற ஸ்லீப்பர் செல்கள் எங்கேதான் இருக்கிறாங்க?’ என்று கேட்டதற்கு ‘நான் முன்னாடியே சொன்ன மாதிரி அவங்க அத்தனை பேரும் அமைதியா எடப்பாடி அணிக்குள்ளே இருந்துதான் நடப்பவைகளை கவனிச்சுட்டு இருக்கிறாங்க.’ என்று சொல்லியிருக்கிறார்.
‘உங்க அணி எவ்வளவோ பிரச்னைகளை சந்திச்சாச்சு. ஆனாலும் அந்த ஸ்லீப்பர் செல்களிடமிருந்து எந்த ரியாக்ஷனுமில்லை. எப்போதான் அவங்க வெளியில வருவாங்க?’ என்று கேட்டதற்கு...
‘ஸ்லீப்பர் செல்களோட டெக்னிக்கே பதுங்கியிருந்து சரியான சூழல்ல வெளிப்படுறதுதானே! அதனால அதற்கான தருணத்துக்காகத்தான் அவங்க காத்திருக்காங்க.
கூடிய சீக்கிரம் அப்படியொரு சூழல் வரும். அப்போ வெடிச்சு வெளியில வர்றவங்க, இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பாங்க. நீங்க நினைக்கிற மாதிரி ‘நான் தான் ஸ்லீப்பர் செல்’ அப்படின்னு கழுத்துல போர்டு மாட்டிட்டு அலைய முடியாது யாரும்.’ என்று கடுப்பானாலும், அலுங்காமல் பதில் கூறியிருக்கிறார்.