
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே நகல் எடுத்தது போல் பின்பற்றுவதால், அவர்களை போல் ஆகிவிட முடியாது.
நாஞ்சில் சம்பத் பாணியில் சொல்வது என்றால், பூனை உடலெல்லாம் வரி, வாரியாக சூடு போட்டுக் கொள்வதால் புலி ஆகிவிடமுடியாது. வான் கோழி உயர, உயர பறந்தாலும் வட்டமிடும் பருந்தாகிவிடமுடியாது.
ஒருவரின் ஆழ் மனதில் என்ன மாதிரியான சிந்தனைகள் பதிந்திருக்கிறதோ, அதுதான் அவர்களின் செயல்பாடுகளில் எதிரொலிக்கும்.
சந்திரமுகி படத்தில் கங்காவாக வரும் ஜோதிகா, என்னதான் தன்னை சந்திரமுகியாக வரித்துக் கொண்டாலும், சுய நினைவு திரும்பும்போது அவர் மீண்டும் கங்காதான்.
இதை உணராத, தினகரன் தொப்பி போட்டுக் கொள்வதால், தம்மை எம்.ஜி.ஆர் ஆக வரித்துக் கொண்டு, ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஏற்கனவே, திரை உலகில் இருந்து அரசியல் ஆசை கொண்ட பலர் எம்.ஜி.ஆர் போல தம்மை வரித்துகொண்டு ஆடிய ஆட்டத்தினால், இருப்பதையும் இழந்து கரை ஒதுங்கிய வரலாறு உண்டு.
தாம் சம்பாதித்தவற்றை, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கி, கொடுத்துக் கொடுத்து கரங்களை சிவக்க வைத்தவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசாக முடியும்.
ஆனால் வாங்கி, வாங்கி கருத்துப்போன கரங்களுக்கு சொந்தக் காரர்கள், தொப்பி அணிந்து கொள்ளும் ஒரே காரணத்தினால் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா என்ன? இது ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அடுத்து, ஜெயலலிதா போலவே, பச்சை புடவை கட்டி, கொண்டை போட்டுக் கொண்டு, அக்கா இருந்த இடத்தில் இருக்க எனக்கு தகுதி இல்லையா? என்று வலம் வந்தவர் சசிகலா.
அவர் இன்று எந்த நிலையில் இருக்கிறார்? சிலருடைய பாணியை பின்பற்றும்போது, அதுவே அவர்களுக்கு சிக்கலாக மாறிவிடுகிறது.
அதனால்தான், ஜெயலலிதா வேடம் போட்ட சில நாட்களிலேயே, பொது செயலாளர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டு பெங்களூரு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா வேடம் போட்ட சில நாளிலேயே ஜெயிலுக்குப் போனார் சசிகலா. தற்போது எம்.ஜி.ஆர் வேடம் போட்டிருக்கும் தினகரனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது போகப்போக தெரியும்.
தினகரன் பிரச்சாரத்தில், தற்போது கூடவே இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கும், ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு வித்யாசம் தெரியாத அமைச்சர்.
இவர் திருவாய் மலர்ந்து, பாராட்டுவதாக சில வார்த்தைகளை எடுத்து கூறி, தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் விடமாட்டார் என்று இப்போதே அதிமுக தொண்டர்கள் அச்சப்பட ஆரம்பித்து விட்டனர்.
எனவே, தொப்பி போட்டவர் எல்லாம் 'எம்.ஜி.ஆர்' ஆக முடியாது.
கொண்டை போட்டவர்கள் எல்லாம் 'அம்மா' ஆக முடியாது என்பதை மக்கள் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.