
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பிரசாரம் மேற்கொள்வதற்கான வாகனம் தயாராகிவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த ஓராண்டாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்க இருந்த சமயத்தில், தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் இடையே கடும் போட்டி நிலவியது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த முறை நிலையே தலைகீழாக மாறிவிட்டது. கடந்த முறை தினகரனுக்காக ஓட்டு கேட்ட ஆட்சியாளர்கள், இந்தமுறை மதுசூதனனுக்கு ஆதரவாக கேட்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கடந்த முறை ஆட்சியாளர்களுடன் வலம்வந்த தினகரன், இம்முறை தனித்து விடப்பட்டிருக்கிறார்.
திமுக, அதிமுக, தினகரன் ஒவ்வொரு தரப்பும் ஒரு வகையில் இந்த தேர்தலில் தங்களை நிரூபித்து காட்ட துடிப்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த முறை தேர்தல் நடக்க இருந்தபோது, மார்ச் மாதத்தில் பிரசாரம் மேற்கொண்ட தினகரனின் பிரசார வாகனத்தில் சசிகலாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. பிரசாரத்தின் எந்த இடத்திலும் தன்னை அறியாமல் கூட சசிகலாவின் பெயரை பயன்படுத்தவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தண்டனை பெற்று சிறைக்கு சென்றதால், சசிகலாவின் பெயரை பிரசாரத்தில் சொல்லக்கூட தினகரனும் ஆட்சியாளர்களும் தயாராக இல்லை.
ஆனால், இந்தமுறை தனித்துவிடப்பட்டதால் தினகரன் சசிகலாவின் பெயரை உச்சரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தினகரனின் பிரசார வாகனத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தோடு சசிகலாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இரட்டை இலையை மீட்பதற்காகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வென்று தொண்டர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபித்து கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தினகரன் உள்ளார்.
அதனால், இந்த தேர்தலில் தனது வலிமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஜெயலலிதா போட்டோவோ.. சசிகலா போட்டோவோ.. எதை போட்டாவது.. என்ன செய்தாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என தினகரன் தீவிரமாக செயல்படுகிறார்.