
நான் அவரை போன் போட்டு மிரட்டினேனா? அவர் அப்பட்டமாக புளுக்கிக் கொண்டிருக்கிறார். மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இவரேகூட ஆள்வைத்து மிரட்ட வைத்திருக்கலாம். என தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலுரையாற்றிய அமைச்சர் தங்கமணி, "என்னை டாஸ்மாக் அமைச்சர் என்று கொச்சைப்படுத்துகின்றனர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சட்டசபையில் நேற்று முன்தினம் அவரை நான் ஒருமையில் பேசியதாக தொலைபேசியில் என்னைக் கடுமையாக திட்டி, கேவலமாக பேசுகின்றனர், அதனாலேயே என்னால் தொலைபேசியை எடுக்க முடியவில்லை என்றார்.
அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் இன்று சட்ட சபையிலிருந்து வெளிநடப்பு செய்த தினகரன் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நேற்றைய மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் தங்கமணி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பற்றி மட்டும் அரை மணி நேரம் பேசியுள்ளார். மேலும் உங்கள் தரப்பிலிருந்து போனில் அவரை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, "நான் அவரை போன் போட்டு மிரட்டினேனா? அவர் பொய்யாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இவரேகூட ஆள்வைத்து மிரட்ட வைத்திருக்கலாம். இவர்களைத் தமிழக மக்களும் எங்கள் கட்சியினரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்.
"டாஸ்மாக் அமைச்சரை டாஸ்மாக் அமைச்சர் என்று தானே சொல்ல முடியும்? ஆனால் குற்ற உணர்வுடன் தங்கமணி சட்டசபையில் தன்னைப் பற்றி ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் தெரியும் என்று கூறுகிறார். பார்க்கலாம் வரும் தேர்தலில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்று" என கலகலப்பாக பேசினார்.