போராட்டம் பண்ணி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எல்லாம் சரி… 30 ஆயிரம் குடும்பங்கள் என்ன செய்யப் போகிறது? நடுத் தெருவில் நிற்கும் அவர்களுக்கு என்ன வழி ?

First Published Jun 1, 2018, 3:25 PM IST
Highlights
30000 families future is loss because of closed sterlite factory


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு நிரந்தரமாக மூடுவிழா நடத்தியுள்ளதால் அங்கு பணி புரிந்த 30,000 பேர் வேலை இழப்பார்கள் எனவும், அந்த ஆலை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மறைமுகமாக வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கும் 1 லட்சம் பேரில் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் தகவல்வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நேற்றல்ல 22 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டங்களுக்கிடையதோன் இந்த ஆலை தொடங்கப்பட்டது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தாமிர உருக்கு ஆலையாகும். ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்டுள்ள அந்த ஆலை, உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர ஊருக்கு ஆலையாக இருந்தது.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஏராளமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும், அப்பகுதியில் உள்ள நிலத்தடிநீர் முற்றிலும் கெட்டுப்போய்விட்டதாகவும், காற்று மாசுபடுவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில்தான் கடந்த 100 நாட்களாக  ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள குமரெட்டிபுரம் மக்கள் அறவழியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அது பெரிதாகி இறுதியில் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்ப்ட்டனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதாவது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சட்டப்போராட்டமும், மக்கள் போராட்டமும் இந்தியாவில் சக்திவாய்ந்த ஒரு தொழில் குழுமத்தின், உலகின் மிகப்பெரிய ஆலை ஒன்றை இழுத்து மூட வைத்துள்ளது.

தற்போது  தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இனி அவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்… புற்று நோயில் இருந்து விடுபடலாம்… நிலத்தடி நீர் சுத்தமாகும்… இப்படி பல நன்மைகள் ஒரு புறம் இருக்க ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக பணி புரியும் 30 ஆயிரம் குடும்பங்களில் நிலை தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. மறைமுகமாக வேலை வாய்ப்பைப் பெறும் 1 லட்சம்  தொழிலாளர்கள் கதி !  

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசின் முடிவால் 30,000 பேர் வேலை இழக்க நேரிடும்  என்றும்  தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி இந்தியாவே பொருளாதாரரீதியாக பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தாமிர உருக்காலையை நம்பியிருந்த சிறு தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என ராம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆலையை மூடுவதால் ஆண்டொன்றுக்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவின் இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

.வேலை இழந்தவர்களுக்காக வேறு பணி வாய்ப்புகள் வழங்குவதைவிடவும், ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்த தாமிரத்திற்கு ஈடு அல்லது மாற்று என்ன, அதனால் உண்டாகும் பொருளாதாரத் தாக்கங்கள் என்ன, பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி என்பன போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

அதற்கு காரணம், இந்தியாவின் உள்நாட்டுத் தாமிரத் தேவையில் 48 சதவீதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், இணையதள சேவையைப் பரவலாக்குதல் போன்ற முயற்சிகளில் அரசும் தொழில்துறையும் முனைப்புடன் இருக்கும்போது, நாட்டின் தாமிரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கைவிடவும் சற்று அதிகமான தேவையைப் பூர்த்தி செய்த ஒரு தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டுள்ளது நிச்சயம் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தை குறுகிய கால அடிப்படையிலும், நீண்டகால அடிப்படையிலும் உண்டாக்கும் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள்.

இப்போதைய சூழ்நிலையில், தாமிரம் பயன்படுத்தப்படும் பொருட்களின் பற்றாக்குறை, அதனால் உண்டாகும் விலையேற்றம் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது என்பதுதான் உண்மை. நீண்ட கால அடிப்படையில் சமாளிக்க, தாமிர இறக்குமதி மற்றும் இந்திய நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகியவையே  இதற்கான தீர்வு. இவை இரண்டும் நடக்காதபோது, மின்துறை வளர்ச்சியில் தொய்வும், அதைச் சார்ந்துள்ள பிற தொழில் நடவடிக்கைகளில் சரிவும் உண்டாவது தவிர்க்க முடியாதது என்பதே உண்மை.

click me!