தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர் வைகுண்டராஜன்? பரபரப்பு தகவல்!

By sathish kFirst Published Oct 6, 2018, 10:07 AM IST
Highlights

கடந்த ஆண்டு தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பிற்கு  ஏற்பாடு செய்தவர் வி.வி.மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜன் தான் சந்தேகம் எழுப்பப்படுகிறது.  

தற்போது தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கும் ஒரு விஷயம் தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பு தான். அதுவும் கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போது தினகரனை சந்தித்ததாக ஓ.பி.எஸ் ஒப்புக் கொண்டிருப்பதும் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 
   
தற்போதைய சூழலில் இருவருமே சந்திப்பிற்கு பொதுவான நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்ததாக கூறுகின்றனர். அந்த பொதுவான நண்பர் யார் என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அந்த நண்பர் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் குவாரி நடத்தி வரும் வைகுண்டராஜனாக இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


  

ஏனென்றால் வைகுண்டராஜன் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் ஆகிய இருவருக்குமே நெருக்கமானவர். மேலும் ஓ.பி.எஸ் தினகரனை சந்தித்ததாக ஒரு விவகாரத்தை தங்கதமிழ்செல்வனிடம் பேட்டியாக எடுத்து முதலில் ஒளிபரப்பியதும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான நியுஸ் 7 தொலைக்காட்சி தான். மேலும் தினகரன் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு சென்ற பிறகு மீண்டும் நியுஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளரை மட்டும் வீட்டிற்குள் அழைத்து மீண்டும் ஒரு பேட்டியை எக்ஸ்க்ளுசிவ்வாக டி.டி.வி கொடுத்துள்ளார்.
   
மேலும் இந்த சந்திப்பு விஷயத்தையே தற்போது ஒரு அரசியல் காரணத்திற்காகத்தான் தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆதாயம் அடைய வைகுண்டராஜன் தரப்பும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் தர்மயுத்தம் சமயத்தில் தினகரனை சென்று ஓ.பி.எஸ் சந்திக்கிறார் என்றால் நிச்சயமாக வைகுண்டராஜன் போன்ற ஒரு பெரிய தொழில் அதிபரால் மட்டுமே ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

click me!